Tuesday, September 28, 2021

ம் நான்காவது வால்யூம்

 *2012ல் சமூக விஞ்ஞான கழகம் ஏற்பாடு செய்திருந்த மூலதனம் வாசிப்பு நிகழ்ச்சியை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் துவக்கி வைத்தார். அந்த குழுவில் நானும் பங்கேற்று வாரந்தோரும் கூடி மூலதனம் படித்து விவாதித்தோம். பார்க்க http://marxinmooladhanam.blogspot.com. 2016ல் மூன்று வால்யூம்களும் படித்து முடித்தோம். நான்காவது வால்யூமை  தேடினேன்.  கிடைக்கவில்லை. உபரி மதிப்பு பற்றிய, மூன்று புத்தக பிரிவுகளாக உள்ள அந்த நான்காவது வால்யூம்  இப்போது என் புத்தக அலமாரியில். எப்படி வந்தது?*.


*தோழர் சிசுதோஷ் லஹிரி கௌஹாத்தியில் தொலைபேசி துறையில் பொறியாளர். 1974ல் சிறு நீரகம் செயலிழந்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சி எம் சி வந்தார். தோழர் மோனி போஸ் என் அப்பாவுக்கு எழுதிய கடிதம் கொண்டு வந்திருந்தார். அப்பா மாற்றலாகி வெளி ஊரில் இருந்தார். லஹிரியுடன் தாயார் மற்றும் சகோதரன் வந்திருந்தனர். மனைவியும் கைக் குழந்தையும் சில சில வாரங்கள் பொறுத்து வந்தனர். என் வீட்டிற்கு எதிரிலேயே ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினேன். அவர்களுக்கு பெரிய நிம்மதி.*


*பின்னர் உடன் வந்திருந்த சகோதரன் பரிதோஷ் லஹிரி தானமாக தந்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு சிசுதோஷ் நலமடைந்தார். சிசுதோஷ் வேலூருக்கு மாற்றலாகி வந்து பதவி உயர்வு பெற்று பெரிய அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயம் உடன் பணிபுரிந்த பொறியாளர் தோழர் ரகுநாதனோடு அரசியல் பேசி மார்க்சியத்தின் மேல் பற்று ஏற்படுத்தினார். 1998ல் லஹிரி மரணமடைந்தார்.  தோழர் ரகுநாதன் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பேராசிரியர் ஆத்ரேயாவின் ஆலோசனைப்படி டேவிட் ரியோஜெனோவின் மார்கஸ் ஏங்கெல்ஸ்  வாழ்வும் எழுத்தும்ஓர் அறிமுகம் புத்தகத்தை அபராஜிதன் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அறிவியல் இயக்கத்தில் செயலூக்கத்துடன் செயல்பட்டார்.  எங்களோடு மூலதனம் படித்தார் முடிப்பதற்கு முன்பே 2015ல் மரணமடைந்தார்.  அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய மகன்கள்   ரகுநாதன் சேர்த்து வைத்திருந்த சிலவற்றை மட்டும் எடுத்துச்சென்றனர். மற்ற புத்தகங்களை பேராசிரியர் ஆத்ரேயா ஆலோசனைப்படி கட்சியின் மாநில அலுவலக நூலகத்துக்கு தர முன் வந்தனர். பல மாதங்கள் பொறுத்துதான் அவற்றை எடுத்து வர நேரம் கிடைத்தது. அப்படி கொண்டு வரும் போது அதில் இருந்த மூலதனம் நான்காவது வால்யூம்    புத்தகத்தை மட்டும் நான் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். பிரித்துப் பார்த்ததும் வியப்படைந்தேன். தோழர் லஹிரிக்கு அவர் பணியாற்றிய தொழிற்சங்கத்தின் தோழர்கள் தந்த புத்தகம் அவருக்குப் பின் ரகுநாதனுக்கு வந்து இப்போது என் புத்தக அலமாரியில்.*

No comments:

Post a Comment