வேலூர் சி எம் சி மருத்துவ மனைக்கு எதிரே இருந்த கிளைக்கு மாற்றப்பட்டதிலிருந்து சிகிச்சைக்காக வரும் வெளி மாநில கட்சி தோழர்களுக்கு ஏதாவது உதவி தேவையாக இருப்பின் என்னை சந்திக்கச் சொல்லுவார்கள். நானும் அவர்களுக்கு தேவையான தங்குமிடம், சிகிச்சையின் போது தேவைப்படும் ரத்த தானம் போன்றவற்றிற்கு வழி காட்டுவேன். அப்படி துவங்கிய பணியில் மகிழ்ச்சி அடைந்தவர்கள் ஊர் திரும்பியதும் அவர்களுக்கு தெரிந்தவர்களையும் என்னை சந்தித்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள சொல்ல என்னுடைய மருத்துவ மனை வேலை விரிவடைந்து கொண்டே போனது. நம்முடைய கட்சியின் உயர் மட்ட தலைவர்களுக்கும் உதவியாக இருக்கும் பணி எனக்கு தரப்பட்டது.
1972ல் தோழர் ஏ கே கோபாலன் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவர் அப்போது நாடாளு மன்றத்தில் Opposition Group leader. எதிர்கட்சிகளில் நாம்தான் பெரிய கட்சி, ஆனால் 20 பேர்தான். ஆகவே opposition party leader என்பதற்கு பதிலாக opposition group leader என்றுதான் நியமிக்கப்பட்டிருந்தார்.
சிஎம்சி மருத்துவ மனையில் வார்டில் வெராண்டாவுடன் இருக்கும் கடைசி அறையில் இருந்தார். மாலை வேளைகளில் அறை வாசலில் பெரம்பு சாய் நாற்காலியில் அமர்ந்திருப்பார். நிறைய மலையாளிகள் வந்து பார்த்து பேசிய வண்ணம் இருப்பார்கள். யாரும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் இருக்க நான் அவரோடு இருப்பேன்.
ஒரு நாள் காலை 11 மணி இருக்கும் ஏகேஜி என்னைப் பார்க்க வங்கிக்கு வந்துவிட்டார். மத்திய அரசு கெரோசின் விலையை ஏற்றிவிட்டது. ஏழைகள் சிரமத்திற்குள்ளாவார்கள் கண்டித்து அறிக்கை விட வேண்டும். உள்ளுர் பத்திரிகை அலுவலகம் போக வேண்டும் வா என்று சொன்னார். மருத்துவ மனையில் அனுமதி வாங்கிக் கொண்டு வந்திருந்தார். நான் வங்கி மேலாளரிடம் தகவல் சொல்லிவிட்டு புறப்பட்டேன். Opposition leader வந்திருக்கும் போது முதலில் அந்த வேலையை கவனி என்று அனுப்பி வைத்தார். வேலூர் முரசு அலுவலகத்துக்கு இருவரும் சைக்கிள் ரிக்க்ஷாவில் சென்றோம். வேலூர் முரசு ஆசிரியரும் வரவேற்று பேசினார். அன்று தலைப்பு செய்தியாக அறிக்கை வெளிவந்தது.
மருத்துவ மனைக்குள்
வங்கியின் கிளை திறக்க பரிந்துரைத்து ஏகேஜியிடம் கடிதம் கேட்டார் மேலாளர். ஏகேஜியும்கடிதம் தந்தார்.
ஒரு வாரத்திற்கு முன் சிகிச்சைக்கு வந்திருந்த வட மாநில ஸ்டேட் வங்கி இள வயது ஊழியரின் மனைவி அறுவை சிகிச்சையின் போதே இறந்துவிட்டார். இரு குடும்பத்தையும் எதிர்த்து நடந்த காதல் தம்பதியினர் என்பதால் யாரும் அவருடன் உதவிக்கு வந்திருக்கவில்லை. நானும் ஒரு கடைநிலை ஊழியரும் அவருடன் எரி காட்டுக்கு சென்று இறந்த மனைவிக்கு எரியூட்ட உதவியாக இருந்தோம். மறுநாள் சாம்பலை சேகரித்து அனுப்ப சொல்லி கேட்டுக் கொண்டு அன்று இரவே ஊருக்கு திரும்பி விட்டார். அதன்படி சாம்பலை சேகரித்து பார்சல் செய்யும் வேலையை அலுவலகத்தில் வைத்து செய்தோம். இதனால் கோபமுற்ற மேலாளர் எங்களை பெரிதும் கடிந்து கொண்டார். தீங்கு நீங்க கிளையில் கணபதி ஹோமம் செய்தார். என் மீது பெருத்த கோபத்துடன் இருந்தார். ஏகேஜியிடம் கடிதம் வாங்கித் தந்ததும் கோபம் நீர்த்துப் போனது.
No comments:
Post a Comment