என் பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லுவார்கள். நிறைய கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த கதை என் மனதில் ஆழ பதிந்துவிட்டது. இந்த கதை பல கேள்விகளையும் எழுப்பிவிட்டது. இந்த கதையை நான் என் மகனுக்கும் சொல்லியிருக்கிறேன். சிறிது சேர்த்தும் கோர்த்தும் சொல்லியிருக்கிறேன். இதுதான் கதை. எனக்கு என் பாட்டி சொன்னபடியே...
ஒரே ஒரு காட்டில ஒரு புலியாம்.
அந்த காட்டுக்கு ஒரு அழகான பெண் சுள்ளி பொறுக்க வந்தாளாம்.
அப்போ அந்த பெண்ணை புலி பார்த்துவிட்டதாம்.
"ஆஹா இந்த பெண் எத்தனை அழகா இருக்கிறாள். இவளை கல்யாணம் செய்துகொண்டால் வாழ்க்கை பூரா சந்தோஷமா இருக்கலாமே" என்று நினைச்சதாம்.
அந்த பெண்ணின் பின்னாலேயே போச்சாம்.
அந்த பெண்ணும் சுள்ளி பொறுக்கி முடிந்ததும் வீடு நோக்கி போனாளாம்.
பெண்ணின் பின்னாலேயே புலியும் போச்சாம்.
காட்டை தாண்டி ஊருக்குள் போவதற்கு முன்னால ஊருக்கு வெளியிலேயே ஒரு வண்ணானை மிரட்டி அவனிடமிருந்து ஒரு சட்டை, வேட்டி, துண்டு எல்லாம் வாங்கி, மனுஷாளைப் போலவே வேட்டி கட்டிண்டு சட்டை போட்டுண்டு தலைப்பா கட்டிண்டு அந்த பெண்ணின் பின்னாலயே போச்சாம்.
அந்த பெண் ஊருக்குள் தன் வீடு வந்ததும் வீட்டிற்குள்ள போனாளாம்.
பின்னாலேயே போன புலி அவள் வீட்டின் திண்ணையில உக்கந்துண்டதாம்.
கொஞ்சம் நேரம் கழிச்சு அந்த பெண்ணின் அப்பா வீட்டிலிருந்து வெளியே வந்தாராம். திண்ணையில் யாரோ உட்கார்ந்திண்டு இருக்கிறதை பார்த்துட்டு " நீங்க யாரு? என்ன வேணும்?" ன்னு கேட்டராம்.
புலியும், தான் அவருடைய பெண்ணை பார்த்ததாகவும், அவளை தனக்கு ரொம்ப பிடித்துவிட்டதாகவும் அவளை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னதாம்.
இதை கேட்டதும் அந்த பெண்ணோட அப்பாக்கு ரொம்ப சந்தோஷமயிடுத்தாம். "ஆஹா அதுக்கு என்ன. பேஷா போச்சு. என் பெண்ணை உங்களுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி தரேன்" என்று சொல்லி பெண்ணை கல்யாணம் பண்ணி தந்துட்டாராம்.
அந்த புலியும் தன் பொண்டாட்டிய அழைச்சுண்டு காட்டுக்கு போச்சாம். ரொம்ப தூரம் நடந்து வரவே அந்த பெண்ணுக்கு தாகமாக இருந்ததாம் .
"என்னங்க.... தண்ணி வேணும்" ன்னு கேட்டாளாம்.
ஆனா தண்ணீர் தராம "இன்னும் கொஞ்ச தூரம்தான் போயிடலாம்" ன்னு புலி சொல்லியதாம்.
இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் இந்த பெண்ணிற்கு பசி வந்துவிடுதாம். "பசிக்கிறது ஏதாவது சாப்பிட தாங்க"ன்னு கேட்டாளாம்.
இப்பவும் புலி "இன்னும் கொஞ்சம் தூரம்தான் போயிடலாம்"ன்னு சொன்னதாம்.
இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், "இன்னும் எத்தனை தூரம் போறது? பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தாங்க" ன்னு கேட்டாளாம்.
அப்போது அந்த புலி "சும்மா வரயா சுய ரூபத்த காட்டட்டுமா? ன்னு கேட்டதாம்.
மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி பேசவே அந்த பெண்ணும் "அது என்ன சுய ரூபம் அதையும்தான் காட்டுங்களேன். பார்த்துடலாம்" ன்னு சொன்னாளம்.
உடனே புலி தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு புர்ர்ர் என்று சீரியதாம்.
"ஐயோ ஐயோ புலி"ன்னு கத்திக்கொண்டே அந்த பெண் காட்டுக்குள்ளேயிருந்து ஓடி வீட்டுக்கு வந்து, "ஐயோ அப்பா! யார், என்னன்னு விசாரிக்காமலேயே என்ன ஒரு புலிக்கு கல்யாணம் பண்ணிதந்துட்டீங்கள்ளே" என்று அழுதாளாம்.
"ஐயோ அப்படியாம்மா" என்று அப்பாவும் அழுதாராம்.
இந்த கதையில் அம்மா எங்கே? இருந்தார்களா? இருந்தும் பேசவில்லையா? பேச முடியாத நிலையா? இல்லாமல் போனார்களா? பிரசவத்தில் இறந்து போனார்களா? பெண்ணுக்கு கிடைத்த மருத்துவ வசதி அவ்வளவுதானா? தந்தை மறுமணம் செய்து கொள்ளாமல் பெண்ணை வளர்த்தாரா? அப்படி வளர்த்தவரா பெண்ணை இப்படி பாரமாய் நினைத்து பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்? அல்லது அவர் மறுமணம் செய்துகொண்டதால் வந்த விளைவா? வீட்டில் வேறு யாருமே இல்லையா? உற்றார், உறவினர், ஊரார் யாருமே அந்த தந்தைக்கு அறிவுறுத்தவில்லையா? இந்த கேள்விகளெல்லாம் எனக்கு எப்போது வந்தன? இவற்றில் சிலவற்றையாவது பாட்டியிடம் கேட்டேனா? கதையைக் கேட்டுவிட்டு தூங்கிவிட்டேனா?
இந்த கதை நிச்சயமாக ஒரு கதை அல்ல. என் பாட்டியோ அல்லது அவருக்கு இந்த கதையை சொன்ன அவருடைய அம்மாவோ பாட்டியோ தனக்கு நேர்ந்ததையோ அல்லது அவர் பார்த்து மற்றொருவருக்கு நேர்ந்தயையோதான் கதையாக கூறியிருக்கிறார். ஆக என் கேள்விகளெல்லாமே சம்பந்தமுள்ள நியாயமான கேள்விகளே. இந்த கேள்விகளெல்லாம் என் பாட்டிக்கும் வந்திருக்கும். அவர்களுக்கு கிடைத்த பதில் என்னவாய் இருந்திருக்கும்? தன் பேரனுக்கு இதனை சொல்லிவிடவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்த கதை செவி வழியாகவே அதற்கு உரிய முக்கியத்துவத்தோடு சொல்லப்பட்டு வந்துள்ளதாகவே நினைக்கின்றேன்.
என் மகனுக்கும் இந்த கதை நினைவில் உள்ளது. அவன் வளர வளர இந்த கதையின் ஆழம் அவனுக்கு பிடிபடும். அப்படி நேராதபடி நிலைமை மாறிடுமா?
குழந்தையாயிருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்ட தர்மபுரி குழந்தைகள் விடாமுயற்சியோடு பள்ளிக்கு வந்து படிப்பது ஆறுதலாக இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி தொடர, நியாயம் கிடைக்க அகில உலக மகளிர் தினத்தன்று இந்த கதையை சமர்ப்பிக்கின்றேன்.