Tuesday, September 28, 2021

ம் நான்காவது வால்யூம்

 *2012ல் சமூக விஞ்ஞான கழகம் ஏற்பாடு செய்திருந்த மூலதனம் வாசிப்பு நிகழ்ச்சியை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் துவக்கி வைத்தார். அந்த குழுவில் நானும் பங்கேற்று வாரந்தோரும் கூடி மூலதனம் படித்து விவாதித்தோம். பார்க்க http://marxinmooladhanam.blogspot.com. 2016ல் மூன்று வால்யூம்களும் படித்து முடித்தோம். நான்காவது வால்யூமை  தேடினேன்.  கிடைக்கவில்லை. உபரி மதிப்பு பற்றிய, மூன்று புத்தக பிரிவுகளாக உள்ள அந்த நான்காவது வால்யூம்  இப்போது என் புத்தக அலமாரியில். எப்படி வந்தது?*.


*தோழர் சிசுதோஷ் லஹிரி கௌஹாத்தியில் தொலைபேசி துறையில் பொறியாளர். 1974ல் சிறு நீரகம் செயலிழந்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சி எம் சி வந்தார். தோழர் மோனி போஸ் என் அப்பாவுக்கு எழுதிய கடிதம் கொண்டு வந்திருந்தார். அப்பா மாற்றலாகி வெளி ஊரில் இருந்தார். லஹிரியுடன் தாயார் மற்றும் சகோதரன் வந்திருந்தனர். மனைவியும் கைக் குழந்தையும் சில சில வாரங்கள் பொறுத்து வந்தனர். என் வீட்டிற்கு எதிரிலேயே ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினேன். அவர்களுக்கு பெரிய நிம்மதி.*


*பின்னர் உடன் வந்திருந்த சகோதரன் பரிதோஷ் லஹிரி தானமாக தந்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு சிசுதோஷ் நலமடைந்தார். சிசுதோஷ் வேலூருக்கு மாற்றலாகி வந்து பதவி உயர்வு பெற்று பெரிய அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயம் உடன் பணிபுரிந்த பொறியாளர் தோழர் ரகுநாதனோடு அரசியல் பேசி மார்க்சியத்தின் மேல் பற்று ஏற்படுத்தினார். 1998ல் லஹிரி மரணமடைந்தார்.  தோழர் ரகுநாதன் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பேராசிரியர் ஆத்ரேயாவின் ஆலோசனைப்படி டேவிட் ரியோஜெனோவின் மார்கஸ் ஏங்கெல்ஸ்  வாழ்வும் எழுத்தும்ஓர் அறிமுகம் புத்தகத்தை அபராஜிதன் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அறிவியல் இயக்கத்தில் செயலூக்கத்துடன் செயல்பட்டார்.  எங்களோடு மூலதனம் படித்தார் முடிப்பதற்கு முன்பே 2015ல் மரணமடைந்தார்.  அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய மகன்கள்   ரகுநாதன் சேர்த்து வைத்திருந்த சிலவற்றை மட்டும் எடுத்துச்சென்றனர். மற்ற புத்தகங்களை பேராசிரியர் ஆத்ரேயா ஆலோசனைப்படி கட்சியின் மாநில அலுவலக நூலகத்துக்கு தர முன் வந்தனர். பல மாதங்கள் பொறுத்துதான் அவற்றை எடுத்து வர நேரம் கிடைத்தது. அப்படி கொண்டு வரும் போது அதில் இருந்த மூலதனம் நான்காவது வால்யூம்    புத்தகத்தை மட்டும் நான் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். பிரித்துப் பார்த்ததும் வியப்படைந்தேன். தோழர் லஹிரிக்கு அவர் பணியாற்றிய தொழிற்சங்கத்தின் தோழர்கள் தந்த புத்தகம் அவருக்குப் பின் ரகுநாதனுக்கு வந்து இப்போது என் புத்தக அலமாரியில்.*

Sunday, September 26, 2021

தோழர் கே ஜி போஸ்

 *அப்பாவின் தபால் தந்தித் துறை ஊழியர் சங்கமான NFPTE தலைவர் K G Bose சிகிச்சைக்காக சி எம் சி வந்திருந்தார். கல்லூரி விடுமுறை நாட்களானதால் அப்பா என்னை அவரோடு மருத்துவ மனைக்கு அனுப்பினார். அதுதான் என் முதல் சிஎம்சி உதவி பணி. Broken English பேச கிடைத்த முதல் வாய்ப்பு. K G Bose என்னை பெருமையாக பார்த்து மகிழ்ந்தார். அது எனக்கு உற்சாகமாக இருந்தது. அவரிடம் பேசியது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.  நான் அரசியலில் என்னமாதிரி பங்கேற்கப் போகிறேன் என்ற கேள்விதான் என்னுள் பெரிதாக உழன்று கொண்டே இருந்தது. அப்பா எனக்கு சொல்லியிருக்கும் மார்க்சிய கல்வியை, அறிவை நடை முறையில் கொண்டு வர என்னவெல்லாம் சாத்தியம் என்ற சிந்தனையும் சுற்றி சுற்றி வந்தது.*

சி எம் சி மருத்துவ மனை

 *இந்த மருத்துவ மனை வேலை எப்போதிலிருந்து? எனக்கு சி எம் சி எப்போதிலிருந்து தெரியும்?*


*எனக்கு ப்ரைமரி காம்ப்ளெக்ஸ் என்கிற குழந்தை வயதினரின் டிபி. சத்துக் குறைவு மற்றும் எதிர்ப்புச் சக்தி குறைவால் வருவது. இரண்டையும் அதிகப்படுத்தினால் போய்விடும். அது வரை சில உபாதைகள். அதற்கான சிகிச்சை சி எம் சியில் பெறவேண்டும் என்பது 1957ல் அப்பா ஆரணியிலிருந்து மாற்றலாகி வேலூர் வருவதற்கான ஒரு காரணம். சிஎம்சிக்கு அருகிலிருந்த ஜட்கா ஸ்டேண்டு போஸ்டாபீசில் டெலிகிராபிஸ்ட் வாரம் மூன்று நாள் சி எம்சியில் சிகிச்சை.*


*சிஎம்சி அருகில் உள்ள தபாலாபீஸ் என்பதால் தபால் துறையின் யார் சிஎம்சிக்கு வந்தாலும் அங்கு வருவார்கள். அப்படி வந்தவர்களுள் ஒருவர் சாதுலா என்கிற அஸ்ஸாம் மாநில Extra Department ஊழியர். அவருடன் தொடர்பு மொழியே இல்லாத உரையாடல் நடக்கும். சிகிச்சைக்கு வந்தவர் வேலூரிலேயே தங்கிவிட்டார்.  ஏதோ கிடைத்த வேலையில் காலத்தை ஓட்டுவார்.. உடல் நலக் குறைவால் வேலைக்கு போக முடியாத போது அப்பாவை பார்க்க போஸ்டாபீஸ் வருவார். மௌனமாகவே நின்று கொண்டிருப்பார்.  ஆளுக்கு ஒரே ரூபா இரண்டு ரூபா போட்டு பத்து பதினைந்து ரூபா தருவார்கள். "அஸ்ஸாம் நோபடி. ஹியர் யூ" என்பார். அப்பா அம்மா அண்ணன் தம்பி யாருமில்லையா என்றால் தோளை உயர்த்தி இரு உள்ளங் கைகளையும் வெளிப் புறமாக கவிழ்ப்பார். இப்படியே ஐந்தாறு வருடங்கள். அப்புறம் அவரை காணவில்லை எங்கே போனார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.*

ரெயில்வே வேலை நிறுத்தம்

 *1974 மே மாதம் முழுவதும் CAIIB க்காக லீவ் போட்டிருந்தேன். மே தின கொண்டாட்டத்திற்காக பத்து நாட்களாக அலைந்து திரிந்து மே தினம் கொண்டாடி முடித்தாயிற்று. மே 2ம் தேதி ஒரு நாள் விட்டு விட்டு 3ம் தேதி முதல் படிக்க திட்டம். 3ம் தேதி காலை ஏழு மணி இருக்கும். மே 7ம் தேதி முதல் நடக்க இருந்த ரெயில் வே ஸ்டிரைக்கை ஒட்டி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கைது என்று ரேடியோ செய்தி சொன்னது. பத்து நிமிடத்துக்குள்ள SRMU தோழர் அல்லி முத்து வந்துவிட்டார். தலைவரை கைது செஞ்சிட்டாங்க. இப்போதிலிருந்தே வேலை நிறுத்தம் என்று முடிவாகி விட்டது. ஒவ்வொரு கமிட்டி மெம்பருக்கும் ஒரு ஒரு வேலை. நான் வேலூர் கன்டோன்மென்ட் விருந்து ஆரணி வரை லைன்லயே போய் ஆங்காங்கே உள்ள கேங்குக்கு தகவல் சொல்லி அப்படியே ஸ்டிரைக்கில் கலந்துக்கச் சொல்லணும். நீங்களும் வாங்கன்னு அழைத்தார். திறந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவரோடு புறப்பட்டு விட்டேன்.தண்டவாளத்திலேயே நடந்து போய் வழியில் தென்படும் கேங்க் மென்களை கூடவே அழைத்துக் கொண்டு நடப்போம் ஒரு கேங்கிலிருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்ததும் ஒரு இடத்தில் அமர்ந்து அவர்களோடு பேசி, கேள்விகளுக்கெல்லாம் பதிலை சொல்லி, உற்சாகப்படுத்தியவாரே சென்றோம்.*

*வேலூர் டவுன், வேலூர் கன்டோன்மென்ட்  இரண்டு ஸ்டேஷன் ஏரியா கவர் பண்ணியாச்சு. இரண்டு கேங்கை சந்திச்சாச்சு.  போலீஸ் வந்து கொண்டிருப்பதாக inspection trolleyல் வந்த ஒருவர் தகவல் சொன்னார். இனி கூட்டம் வேண்டாம் வழியில் பார்ப்பவர்களை ஒத்தை ஒத்தையாகவே தகவல் சொல்லிக் கொண்டே போகலாம் என வேகமாக நடந்தோம். மதியம் 3 மணி அளவில் கண்ணமங்கலம் வரை வந்துவிட்டோம். எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிட்டுவிட்டு பஸ்ஸில் ஆரணி போவதென்று முடிவை சற்று மாற்றினோம். ஆரணி போனதுமே பலர் கைதாகி விட்ட செய்தி வந்தது.*


*மறுநாள் கைதானவர்களை நிபந்தனை ஜாமினில் எடுத்து வேலூர் டிராவலர்ஸ் தங்க வைக்க ஏற்பாடானது. அவர்களுக்கு உணவு ஏற்பாடு, நிதி திரட்டல் என்று மே மாத லீவ் முழுவதும் இதற்காக போட்டதாகவே முடிந்தது. அன்றைக்கு கைவிட்ட CAIIB அதற்குப் பின்னால் நிரந்தரமாகவே கைவிடப்பட்டது. Part IIல் Public Finance, Foreign Exchange இரண்டே பேப்பர்கள் தான் பாக்கி.*

சந்தாவுக்கு மரியாதை

 *தோழர் தங்கவேல் அருமையான கட்சி ஊழியர். பீடி தொழிலாளர் சங்கத்தின் கள ஊழியர். பிராஞ்ச் ஆபீஸ்களில், கொத்து கொத்தாக வீடுகளில் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு சங்க அறிக்கைகளை விநியோகிப்பது, தீக்கதிர் விநியோகிப்பது, சந்தா வசூலிப்பது போன்றவை இவரின்  வேலை. அவ்வப்போது கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற பேங்குக்கு வருவார். சந்தா வசூலில் வந்துவிட்டது என்பார். மாற்றித் தருவேன். ஐந்து பத்து நோட்டுகள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக இருந்து முப்பது என்று அதிகரித்தது. சரி, வேறு எங்கு போவார் என்று மாற்றித் தருவேன். இப்படி மாதா மாதம் வருவார். பின்னர் சில மாதங்களாக வருவதேயில்லை. அவரை கட்சி கூட்டத்தில் பார்த்தபோது. ஏன் வருவதில்லை என்று விசாரித்தேன்.* 


*"இருந்தாலும் சில தொழிலாளர்களுக்கு சந்தாவை கிழிந்த நோட்டாக தருவதே வேலையாகப் போய்விட்டது தோழா.  நல்ல நோட்டு வச்சிகிட்டே கிழிந்த நோட்டை தள்ளிவிடறாங்க. இது சரியில்லைன்னு சொல்லிட்டேன். சந்தாவுக்கே மரியாதை இல்லாமல் போகுதில்லே."*


*தன்னையே ஆமோதித்து நகைத்தவாறு போய்விட்டார்.*

Wednesday, September 22, 2021

சுய கல்வி

 நாற்பது வருடங்களுக்கு முன் வட ஆற்காடு மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் அதாவுல்லா. பள்ளி படிப்பு அதிகமில்லாத பீடித் தொழிலாளியாக இருந்து சிஐடியூ வில் முழு நேர பணி. திருமணமாகதவர் கட்சி அலுவலகத்திலேயே தங்கி இருப்பார். People Democracyஐ dictionary வைத்து படிப்பார். முக்கிய கட்டுரைகளில் ஓரிரு பாராக்களை மொழி பெயர்த்து வைந்துக் கொள்வார். தீக்கதிரில் அந்த கட்டுரை வரும்போது தன் மொழி பெயர்பை சரி பார்த்து மகிழ்வார். அவரின் அந்த புன்னகை கலந்த மகிழ்ச்சியான முகம் என் நினைவில் முக்கிய தருணமாக பதிந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார்.

தோழர் முகமது அமின்

 *நம்முடைய தலைவர்கள் தியாகத்திலும், எளிமையிலும் ஈடு இணையற்றவர்கள் என்பது நாம் அறிந்ததே. எந்த நிலையிலும் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி புரட்சியை நோக்கி முன்னேறுவதில் சொந்த வாழ்க்கை நிலைமைகள் தடையாக இருக்காத வகையில் கட்சி, குடும்பம் இரண்டையும் நடத்தி செல்வதில் கவனத்தோடு இருப்பவர்கள்.*


*மேற்கு வங்க போக்கு வரத்து அமைச்சர் தோழர் முகமது அமின் தன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் வந்திருக்கிறார். சந்தித்து உதவியாக இருக்கவும் என்று மாவட்ட செயலாளர் தோழர் கே ஆர் சுந்தரம் தகவல் அனுப்பினார். தோழர் என் ராம் உடன் வந்திருக்கிறார் என்றும் தகவல். நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன்.  விசாரித்துக் கொண்டு மருத்துவ மனையில் அவர் மனைவி இருக்கும் அறைக்கு சென்றேன். அமைச்சர் பற்றி எனக்கிருந்த எதிர் பார்ப்புடன் சென்றேன். அறையில் அப்படி யாரும் இல்லை. ஒரு பெண்மணி  படுக்கையிலும் ஒரு எளிய மனிதர் அருகில் ஒரு இருக்கையிலும் இருந்தனர். நான் தவறான அறைக்கு வந்து விட்டதாக எண்ணி அறைக்கு வெளியியே வந்தேன். அப்போது தோழர் என் ராம் அங்கு வந்தார். நாங்கள் முன்னரே பரிச்சயமானவர்கள். அவர் உள்ளேயிருந்த நபருக்கு என்னை அறிமுகம் செய்தார். அவரின் எளிமையான தோற்றம் என்னை வியக்க வைத்ததோடு என் கணிப்பு என்னை குட்டியது.*


*தோற்றம் மட்டுமல்லாமல் அவரின்   அனைத்து பழக்க வழக்கங்களும் எளிமையாகவே இருப்பதை அதன் பின்னர் அவர் அங்கிருந்த நாட்களில் தெரிந்து கொண்டேன். அத்தகைய எளிமையை நான் தோழர் ஏ. நல்ல சிவனிடம் பார்த்திருக்கிறேன்.*


*அமைச்சரின் மனைவி சிகிச்சையில் இருந்த சமயத்திலும் பின்னர் மறு பரிசோதனைக்கு வந்திருந்த கால கட்டத்திலுமாக  மூன்று முறை வேலூர் வந்து போனார் அவரோடு  சென்னை வரை சென்று விமானத்தில் அனுப்புவதும் பின்னர் சென்னை விமான நிலயத்திலிருந்து வேலூர் அழைத்து வருவதும் எனக்கு தரப்பட்ட வேலை.  தேசிய கொடியுடன்  அரசாங்க கார், முன் இருக்கையில் ஒரு போலீஸ் காவலர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் கார் மெல்ல செல்லும்போது காரில் போகும் முக்கியஸ்தர் யாரென்று குனிந்து நோட்டமிட்டவர்கள் அனுமானமாக என்னைதான் உற்று பார்த்தனர். உண்மை மறைந்திருந்ததால் அவர்கள் குட்டு பெறாமல் தப்பித்தனர்.*


*அவர் வந்திருந்த சமயம் மேற்கு வங்கத்தில் வெள்ளம் நிவாரண வேலை நடந்து கொண்டிருந்தது. அதையொட்டி வேலூரிலும், காஞ்சியிலும் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, நிவாரண வேலைகள், நிதி நெருக்கடி பற்றி எடுத்துரைத்தார். காஞ்சிக்கு பஸ்ஸில் தான் சென்று வந்தோம். போக்கு வரத்து அமைச்சரின் எளிமையும், அவர் பஸ்ஸில் பயணிப்பதும் அந்த ஊழியர்களுக்கு பெருத்த வியப்பை ஏற்படுத்தியது.*


*மருத்துவ மனை மருத்துவர்கள் கூட வியப்பிற்குள்ளேயே இருந்தனர்.*


*மருத்துவ மாணவர்கள் அறுவை சிகிச்சையை  பார்ப்பதற்காக கண்ணாடி கூரை அமைக்கப்பட்டுள்ள மாடத்தில் அவர்களோடு அமர்ந்து ஓபன் ஹார்ட் சர்ஜரி ஒன்றை பார்க்கும் வாய்ப்பை நிர்வாகத்தினர் அமச்சருக்கு அளித்தனர். அவருடன் நானும் அந்த வாய்ப்பைப் பெற்றேன். அப்போதெல்லாம் அத்தகைய அறுவை சிகிச்சை அரிதாக செய்யப்பட்டது. மருத்துவ மனை உதவிப் பணியில் இம்முறை பயனடைந்தது நானே. அதன் பின்னர் கல்கத்தா சென்ற போதும் மாநாடுகளிலும் அவரைத் தேடிச் சென்று பார்ப்பேன். என்னை சந்திப்பதில் அவருக்கும் மகிழ்ச்சிதான்.*

தோழர் பி ராமமூர்த்தி

 மூன்றாவது இருதரப்பு ஒப்பந்தம் இழுபறியாக இருந்த சமயம். யூனியன் வங்கியின் மாநாடு வேலூர் ராஜகோபால் நிலையத்தில் நடந்தது. தோழர் பி ராமமூர்த்தி துவங்கி வைக்க முடிவு. வரவேற்பு கமிட்டியினர் என்னை அணுகி ஏற்பாட்டுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன்படி தோழர் பி ஆர் அவர்களை வரவேற்று தங்க வைத்து உடன் இருந்து, அவருக்கு தேவையான வசதிகளை செய்து தந்து மாநாட்டுக்கு அழைத்து வந்து பின்னர் வழியனுப்பும் வரை நான் அவருடன் இருந்தேன்.


அவருக்கு அந்த சமயம் கால்களில் வீக்கம் இருந்தது. தானே தைலம் தடவி நீவி விட்டுக் கொண்டிருந்தார். நான் உதவ முன் வந்தும் ஏற்கவில்லை. மீண்டும் வலியுறுத்தியதும் அனுமதித்தார். என் தந்தை தோழர் சி எஸ்  பியை நன்கு அறிந்தவர். நான் அவருடைய மகன் என்றதும் பெரிதும் மகிழ்ந்தார்.  குடும்ப விவரங்களை விசாரித்தார். நாளைய மாநாட்டில் பேச வேண்டும் என்று கேட்டார். மூன்றாவது இருதரப்பு ஒப்பந்தம் இழுபறி நிலமையை சொன்னேன். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் மாநாட்டில் பல வங்கி ஊழியர் சங்கத் தலைவர்களும் வியக்கும் வண்ணம், பஞ்சப்படிக்கு உச்சவரம்பு, மெர்ஜரில் குறைபாடு, நிர்வாக தரப்பு கோரிக்கைகள் என நிர்வாகத்தின் அடாவடித்தனங் களையும் திருத்தல் வாத மற்றும் சந்தர்பவாத தலைமைகளின் கேவலமான நிலைப்பாடுகளை யும் வெட்ட வெளிச்சமாக்கினார். அவர் சொன்னபடியே சங்கங்கள் கால வரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு அனைத்து ஊழியர் விரோத அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் கண்டனர். பி ஆர் விளக்கமாக விவரித்திருந்ததால் சங்கத் தலைமையின் முடிவை விமர்சிப்பது எளிதாக இருந்தது. பின்னர் ரிசர்வ் வங்கியில் நமது தலைமை பஞ்சப்படி உச்ச வரம்பில் சில முன்னேற்றங்களை கண்டது. அதன் பிறகு வணிக வங்கியிலும் அந்த முன்னேற்றம் மாற்றிய ஒப்பந்தத்தின் மூலம் விரிவாக்கப்பட்டது. தொழிலாளர்கள் நலனில் நுணுக்கமாக பார்க்கும் திறன் படைத்த சிறந்த தலைவர் பி ஆர் என்பதை வங்கி ஊழியர்கள் நேரிடையாக உணர்ந்த தருணமாக அது அமைந்தது.

Saturday, September 18, 2021

வேலூர் மத்திய சிறைச் சாலை

 சிறைச் சாலை நண்பர்கள் பல சமயங்களில் உதவியிருக்கிறார்கள். கல்லுரி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது கும்பகோணம் கல்லூரி ஆசிரியர்கள் வேலூர் சிறையிலடைக்கப் பட்டார்கள். மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள். சிறையிலடைக்கப்டும் முன் ஸ்டேட் பேங்க் வளாகத்திற்கு எதிரிலிருந்த ஓட்டலில் உணவு. உணவு. நான் உணவு இடைவேளைக்கு புறப்பட்டபோது அவர்களை கவனித்து அறிமுகப் படுத்திக் கொண்டேன். பெண்கள் வங்கி ஓய்வறையைப் பயன்படுத்த ஏற்பாடு செய்தேன். அச்சமயம் பேங்கிற்கு வந்திருந்த சிறை நண்பரை அறிமுகப்படுத்தி தேவையான உதவிகள் செய்யச் சொன்னேன். பெண்கள் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தார்கள். போராட்ட செய்திகளை தினமும் தெரிந்து கொள்ள அவர் மூலம் தீக்கதிர் கிடைக்க ஏற்பாடு செய்தேன். நானும் பல முறை சிறையில் அவர்களை சந்தித்தேன். 


வேலூர் நண்பர்கள் நினைவுகள் அழிவதில்லை நாடகத்தை தமுஎச தஞ்சை நாடக விழாவில் நடத்திய போது கைதி உடைகள் வார்டன் உடைகளனைத்தும் ஸ்டோர்ஸிலிருந்து புத்தம் புதிதாக தந்து உதவினர். ஸ்டேட் பேங்க் தொடர்பு பல விதத்திலும் பயன்பட்டது.

தோழர் நிருபன் சக்ரவர்த்தி

எமர்ஜென்ஸியின்போது ஸ்டேட் பேங்கிற்கு சம்பள கருவூல பில் வாங்க வரும் மாநில அரசு ஊழியர்கள் உதவியுடன் வேலூர் மத்திய சிறையைப் பார்க்க சென்றேன். அங்கே போனபோது மிசா கைதிகள் பகுதிக்கும் அழைத்துச் சென்றார். எதிர்பாராத விதமாக ஒரு நிகழ்வு. கையில் பிளாஸ்டிக் பக்கெட் நிறைய கோதுமை மாவை ஸ்டோர்ஸிலிருந்து சமையலறைக்கு லுங்கி அணிந்த ஒருவர் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். உடன் வந்த நண்பர் இவர்தான் உங்கள் கட்சியின் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நிருபன் சக்ரவர்த்தி என்றார். உங்கள் கட்சிக்காரர் என்று என்னையும் அவருக்கு அறிமுகப் படுத்தினார் வியப்பும் உற்சாகமும் பீறிட அவர் கையைப் பிடித்துக் குலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்தேன். நலம் விசாரித்தேன். பின்னர் அவர் முதல்வரானபோது அவரை சிறையில் சந்தித்த கதையை நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக் கொண்டேன்.

தோழர் பி சுந்தரய்யா

தோழர் ஏகேஜியைப் பார்க்க தோழர் சுந்தரய்யா வந்திருந்தார். அவர்தான் சுந்தரய்யா என்பது எனக்கு தெரியாது. பைஜாமாவைப் போன்ற காக்கி நிற பேன்ட், ஜிப்பாவைப் போன்று முட்டி வரை நீண்ட  இளம் காக்கி நிற

அரைக்கை சட்டை அணிந்திருந்தார். வந்து நீண்ட நேரம் ஆகியிருக்கும் என எண்ணுகிறேன், நான் போனதுமே புறப்பட்டுவிட்டார். ஏகேஜி சுந்தரய்யாவை காட்பாடிக்கு வழி அனுப்பிவிட்டு வரும்படி சொன்னார். அது மதிய உணவு நேரம் என்பதால்  பேலஸ் கேஃப்ஃபில் உணவு அருந்தினோம். என்னை பணம் கொடுக்க அனுமதிக்கவேயில்லை. இரும்பை போன்ற உறுதியான தனது கையால் என்னை மெள்ள ஒதுக்கினார். அவருக்கு அது மெள்ள. பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்த அவரின் பலமான கரத்தைத் தள்ளிக் கொண்டு முந்த என்னால் இயலவில்லை.


காட்பாடி செல்ல பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தோம். தெற்கு பக்க திசையைக் காட்டி தொரப்பாடி சென்ட்ரல் ஜெயில் இந்த பக்கம்தானே என்றார். ஆம் என்றேன். கிழக்கு திசையைக் காட்டி இந்த பக்கம் ஆற்காடு என்றார். ஆம் என்றேன். எத்தனை கிலோ மீட்டர்?  பதில் சொல்ல சற்று தாமதமானது. இருபது கிலோ மீட்டருக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன் என்றேன். நினைக்கக் கூடாது. சரியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் topographyக்கு எத்தனை முக்கியம் தருகிறார்கள் என்பது புலப்பட்டது. பஸ் வந்ததும் நானும் அவருடன் பஸ் ஏற எத்தனித்தேன். நான் போய்க் கொள்கிறேனென்று தன் பலமான கையால் மெள்ள தள்ளிவிட்டு பஸ் ஏறி போய்விட்டார்.

தோழர் ஏ கே கோபாலன்

 வேலூர் சி எம் சி மருத்துவ மனைக்கு எதிரே இருந்த கிளைக்கு மாற்றப்பட்டதிலிருந்து சிகிச்சைக்காக வரும் வெளி மாநில கட்சி தோழர்களுக்கு ஏதாவது உதவி தேவையாக இருப்பின் என்னை சந்திக்கச் சொல்லுவார்கள். நானும் அவர்களுக்கு தேவையான தங்குமிடம், சிகிச்சையின் போது தேவைப்படும் ரத்த தானம் போன்றவற்றிற்கு வழி காட்டுவேன். அப்படி துவங்கிய பணியில் மகிழ்ச்சி அடைந்தவர்கள் ஊர் திரும்பியதும் அவர்களுக்கு தெரிந்தவர்களையும் என்னை சந்தித்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள சொல்ல என்னுடைய மருத்துவ மனை வேலை விரிவடைந்து கொண்டே போனது. நம்முடைய கட்சியின் உயர் மட்ட தலைவர்களுக்கும்  உதவியாக இருக்கும் பணி எனக்கு தரப்பட்டது.


1972ல் தோழர் ஏ கே கோபாலன் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவர் அப்போது நாடாளு மன்றத்தில் Opposition Group leader. எதிர்கட்சிகளில் நாம்தான் பெரிய கட்சி, ஆனால் 20 பேர்தான். ஆகவே opposition party leader என்பதற்கு பதிலாக opposition group leader என்றுதான் நியமிக்கப்பட்டிருந்தார்.


சிஎம்சி மருத்துவ மனையில் வார்டில் வெராண்டாவுடன் இருக்கும் கடைசி அறையில் இருந்தார்.  மாலை வேளைகளில் அறை வாசலில் பெரம்பு சாய் நாற்காலியில் அமர்ந்திருப்பார். நிறைய மலையாளிகள் வந்து பார்த்து பேசிய வண்ணம் இருப்பார்கள். யாரும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் இருக்க நான் அவரோடு இருப்பேன்.


ஒரு நாள் காலை 11 மணி இருக்கும் ஏகேஜி என்னைப் பார்க்க வங்கிக்கு வந்துவிட்டார். மத்திய அரசு கெரோசின் விலையை ஏற்றிவிட்டது. ஏழைகள் சிரமத்திற்குள்ளாவார்கள் கண்டித்து அறிக்கை விட வேண்டும். உள்ளுர் பத்திரிகை அலுவலகம் போக வேண்டும் வா என்று சொன்னார். மருத்துவ மனையில் அனுமதி வாங்கிக் கொண்டு வந்திருந்தார். நான் வங்கி மேலாளரிடம் தகவல் சொல்லிவிட்டு புறப்பட்டேன். Opposition leader வந்திருக்கும் போது  முதலில் அந்த வேலையை கவனி என்று அனுப்பி வைத்தார். வேலூர் முரசு அலுவலகத்துக்கு இருவரும் சைக்கிள் ரிக்க்ஷாவில் சென்றோம். வேலூர் முரசு ஆசிரியரும் வரவேற்று பேசினார். அன்று தலைப்பு செய்தியாக அறிக்கை வெளிவந்தது.


மருத்துவ மனைக்குள்

வங்கியின் கிளை திறக்க பரிந்துரைத்து ஏகேஜியிடம் கடிதம் கேட்டார் மேலாளர். ஏகேஜியும்கடிதம் தந்தார்.


ஒரு வாரத்திற்கு முன் சிகிச்சைக்கு வந்திருந்த வட மாநில ஸ்டேட் வங்கி இள வயது ஊழியரின் மனைவி அறுவை சிகிச்சையின் போதே இறந்துவிட்டார். இரு குடும்பத்தையும் எதிர்த்து நடந்த காதல் தம்பதியினர் என்பதால் யாரும் அவருடன் உதவிக்கு வந்திருக்கவில்லை. நானும் ஒரு கடைநிலை ஊழியரும் அவருடன் எரி காட்டுக்கு சென்று இறந்த மனைவிக்கு எரியூட்ட உதவியாக இருந்தோம். மறுநாள் சாம்பலை சேகரித்து அனுப்ப சொல்லி கேட்டுக் கொண்டு அன்று இரவே ஊருக்கு திரும்பி விட்டார். அதன்படி சாம்பலை சேகரித்து பார்சல் செய்யும் வேலையை அலுவலகத்தில் வைத்து செய்தோம். இதனால் கோபமுற்ற மேலாளர் எங்களை பெரிதும் கடிந்து கொண்டார். தீங்கு நீங்க கிளையில் கணபதி ஹோமம் செய்தார். என் மீது பெருத்த கோபத்துடன் இருந்தார். ஏகேஜியிடம் கடிதம் வாங்கித் தந்ததும் கோபம் நீர்த்துப் போனது.