Sunday, September 26, 2021

ரெயில்வே வேலை நிறுத்தம்

 *1974 மே மாதம் முழுவதும் CAIIB க்காக லீவ் போட்டிருந்தேன். மே தின கொண்டாட்டத்திற்காக பத்து நாட்களாக அலைந்து திரிந்து மே தினம் கொண்டாடி முடித்தாயிற்று. மே 2ம் தேதி ஒரு நாள் விட்டு விட்டு 3ம் தேதி முதல் படிக்க திட்டம். 3ம் தேதி காலை ஏழு மணி இருக்கும். மே 7ம் தேதி முதல் நடக்க இருந்த ரெயில் வே ஸ்டிரைக்கை ஒட்டி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கைது என்று ரேடியோ செய்தி சொன்னது. பத்து நிமிடத்துக்குள்ள SRMU தோழர் அல்லி முத்து வந்துவிட்டார். தலைவரை கைது செஞ்சிட்டாங்க. இப்போதிலிருந்தே வேலை நிறுத்தம் என்று முடிவாகி விட்டது. ஒவ்வொரு கமிட்டி மெம்பருக்கும் ஒரு ஒரு வேலை. நான் வேலூர் கன்டோன்மென்ட் விருந்து ஆரணி வரை லைன்லயே போய் ஆங்காங்கே உள்ள கேங்குக்கு தகவல் சொல்லி அப்படியே ஸ்டிரைக்கில் கலந்துக்கச் சொல்லணும். நீங்களும் வாங்கன்னு அழைத்தார். திறந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவரோடு புறப்பட்டு விட்டேன்.தண்டவாளத்திலேயே நடந்து போய் வழியில் தென்படும் கேங்க் மென்களை கூடவே அழைத்துக் கொண்டு நடப்போம் ஒரு கேங்கிலிருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்ததும் ஒரு இடத்தில் அமர்ந்து அவர்களோடு பேசி, கேள்விகளுக்கெல்லாம் பதிலை சொல்லி, உற்சாகப்படுத்தியவாரே சென்றோம்.*

*வேலூர் டவுன், வேலூர் கன்டோன்மென்ட்  இரண்டு ஸ்டேஷன் ஏரியா கவர் பண்ணியாச்சு. இரண்டு கேங்கை சந்திச்சாச்சு.  போலீஸ் வந்து கொண்டிருப்பதாக inspection trolleyல் வந்த ஒருவர் தகவல் சொன்னார். இனி கூட்டம் வேண்டாம் வழியில் பார்ப்பவர்களை ஒத்தை ஒத்தையாகவே தகவல் சொல்லிக் கொண்டே போகலாம் என வேகமாக நடந்தோம். மதியம் 3 மணி அளவில் கண்ணமங்கலம் வரை வந்துவிட்டோம். எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிட்டுவிட்டு பஸ்ஸில் ஆரணி போவதென்று முடிவை சற்று மாற்றினோம். ஆரணி போனதுமே பலர் கைதாகி விட்ட செய்தி வந்தது.*


*மறுநாள் கைதானவர்களை நிபந்தனை ஜாமினில் எடுத்து வேலூர் டிராவலர்ஸ் தங்க வைக்க ஏற்பாடானது. அவர்களுக்கு உணவு ஏற்பாடு, நிதி திரட்டல் என்று மே மாத லீவ் முழுவதும் இதற்காக போட்டதாகவே முடிந்தது. அன்றைக்கு கைவிட்ட CAIIB அதற்குப் பின்னால் நிரந்தரமாகவே கைவிடப்பட்டது. Part IIல் Public Finance, Foreign Exchange இரண்டே பேப்பர்கள் தான் பாக்கி.*

No comments:

Post a Comment