Saturday, September 18, 2021

தோழர் பி சுந்தரய்யா

தோழர் ஏகேஜியைப் பார்க்க தோழர் சுந்தரய்யா வந்திருந்தார். அவர்தான் சுந்தரய்யா என்பது எனக்கு தெரியாது. பைஜாமாவைப் போன்ற காக்கி நிற பேன்ட், ஜிப்பாவைப் போன்று முட்டி வரை நீண்ட  இளம் காக்கி நிற

அரைக்கை சட்டை அணிந்திருந்தார். வந்து நீண்ட நேரம் ஆகியிருக்கும் என எண்ணுகிறேன், நான் போனதுமே புறப்பட்டுவிட்டார். ஏகேஜி சுந்தரய்யாவை காட்பாடிக்கு வழி அனுப்பிவிட்டு வரும்படி சொன்னார். அது மதிய உணவு நேரம் என்பதால்  பேலஸ் கேஃப்ஃபில் உணவு அருந்தினோம். என்னை பணம் கொடுக்க அனுமதிக்கவேயில்லை. இரும்பை போன்ற உறுதியான தனது கையால் என்னை மெள்ள ஒதுக்கினார். அவருக்கு அது மெள்ள. பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்த அவரின் பலமான கரத்தைத் தள்ளிக் கொண்டு முந்த என்னால் இயலவில்லை.


காட்பாடி செல்ல பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தோம். தெற்கு பக்க திசையைக் காட்டி தொரப்பாடி சென்ட்ரல் ஜெயில் இந்த பக்கம்தானே என்றார். ஆம் என்றேன். கிழக்கு திசையைக் காட்டி இந்த பக்கம் ஆற்காடு என்றார். ஆம் என்றேன். எத்தனை கிலோ மீட்டர்?  பதில் சொல்ல சற்று தாமதமானது. இருபது கிலோ மீட்டருக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன் என்றேன். நினைக்கக் கூடாது. சரியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் topographyக்கு எத்தனை முக்கியம் தருகிறார்கள் என்பது புலப்பட்டது. பஸ் வந்ததும் நானும் அவருடன் பஸ் ஏற எத்தனித்தேன். நான் போய்க் கொள்கிறேனென்று தன் பலமான கையால் மெள்ள தள்ளிவிட்டு பஸ் ஏறி போய்விட்டார்.

No comments:

Post a Comment