மூன்றாவது இருதரப்பு ஒப்பந்தம் இழுபறியாக இருந்த சமயம். யூனியன் வங்கியின் மாநாடு வேலூர் ராஜகோபால் நிலையத்தில் நடந்தது. தோழர் பி ராமமூர்த்தி துவங்கி வைக்க முடிவு. வரவேற்பு கமிட்டியினர் என்னை அணுகி ஏற்பாட்டுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன்படி தோழர் பி ஆர் அவர்களை வரவேற்று தங்க வைத்து உடன் இருந்து, அவருக்கு தேவையான வசதிகளை செய்து தந்து மாநாட்டுக்கு அழைத்து வந்து பின்னர் வழியனுப்பும் வரை நான் அவருடன் இருந்தேன்.
அவருக்கு அந்த சமயம் கால்களில் வீக்கம் இருந்தது. தானே தைலம் தடவி நீவி விட்டுக் கொண்டிருந்தார். நான் உதவ முன் வந்தும் ஏற்கவில்லை. மீண்டும் வலியுறுத்தியதும் அனுமதித்தார். என் தந்தை தோழர் சி எஸ் பியை நன்கு அறிந்தவர். நான் அவருடைய மகன் என்றதும் பெரிதும் மகிழ்ந்தார். குடும்ப விவரங்களை விசாரித்தார். நாளைய மாநாட்டில் பேச வேண்டும் என்று கேட்டார். மூன்றாவது இருதரப்பு ஒப்பந்தம் இழுபறி நிலமையை சொன்னேன். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் மாநாட்டில் பல வங்கி ஊழியர் சங்கத் தலைவர்களும் வியக்கும் வண்ணம், பஞ்சப்படிக்கு உச்சவரம்பு, மெர்ஜரில் குறைபாடு, நிர்வாக தரப்பு கோரிக்கைகள் என நிர்வாகத்தின் அடாவடித்தனங் களையும் திருத்தல் வாத மற்றும் சந்தர்பவாத தலைமைகளின் கேவலமான நிலைப்பாடுகளை யும் வெட்ட வெளிச்சமாக்கினார். அவர் சொன்னபடியே சங்கங்கள் கால வரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு அனைத்து ஊழியர் விரோத அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் கண்டனர். பி ஆர் விளக்கமாக விவரித்திருந்ததால் சங்கத் தலைமையின் முடிவை விமர்சிப்பது எளிதாக இருந்தது. பின்னர் ரிசர்வ் வங்கியில் நமது தலைமை பஞ்சப்படி உச்ச வரம்பில் சில முன்னேற்றங்களை கண்டது. அதன் பிறகு வணிக வங்கியிலும் அந்த முன்னேற்றம் மாற்றிய ஒப்பந்தத்தின் மூலம் விரிவாக்கப்பட்டது. தொழிலாளர்கள் நலனில் நுணுக்கமாக பார்க்கும் திறன் படைத்த சிறந்த தலைவர் பி ஆர் என்பதை வங்கி ஊழியர்கள் நேரிடையாக உணர்ந்த தருணமாக அது அமைந்தது.
No comments:
Post a Comment