*நம்முடைய தலைவர்கள் தியாகத்திலும், எளிமையிலும் ஈடு இணையற்றவர்கள் என்பது நாம் அறிந்ததே. எந்த நிலையிலும் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி புரட்சியை நோக்கி முன்னேறுவதில் சொந்த வாழ்க்கை நிலைமைகள் தடையாக இருக்காத வகையில் கட்சி, குடும்பம் இரண்டையும் நடத்தி செல்வதில் கவனத்தோடு இருப்பவர்கள்.*
*மேற்கு வங்க போக்கு வரத்து அமைச்சர் தோழர் முகமது அமின் தன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் வந்திருக்கிறார். சந்தித்து உதவியாக இருக்கவும் என்று மாவட்ட செயலாளர் தோழர் கே ஆர் சுந்தரம் தகவல் அனுப்பினார். தோழர் என் ராம் உடன் வந்திருக்கிறார் என்றும் தகவல். நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். விசாரித்துக் கொண்டு மருத்துவ மனையில் அவர் மனைவி இருக்கும் அறைக்கு சென்றேன். அமைச்சர் பற்றி எனக்கிருந்த எதிர் பார்ப்புடன் சென்றேன். அறையில் அப்படி யாரும் இல்லை. ஒரு பெண்மணி படுக்கையிலும் ஒரு எளிய மனிதர் அருகில் ஒரு இருக்கையிலும் இருந்தனர். நான் தவறான அறைக்கு வந்து விட்டதாக எண்ணி அறைக்கு வெளியியே வந்தேன். அப்போது தோழர் என் ராம் அங்கு வந்தார். நாங்கள் முன்னரே பரிச்சயமானவர்கள். அவர் உள்ளேயிருந்த நபருக்கு என்னை அறிமுகம் செய்தார். அவரின் எளிமையான தோற்றம் என்னை வியக்க வைத்ததோடு என் கணிப்பு என்னை குட்டியது.*
*தோற்றம் மட்டுமல்லாமல் அவரின் அனைத்து பழக்க வழக்கங்களும் எளிமையாகவே இருப்பதை அதன் பின்னர் அவர் அங்கிருந்த நாட்களில் தெரிந்து கொண்டேன். அத்தகைய எளிமையை நான் தோழர் ஏ. நல்ல சிவனிடம் பார்த்திருக்கிறேன்.*
*அமைச்சரின் மனைவி சிகிச்சையில் இருந்த சமயத்திலும் பின்னர் மறு பரிசோதனைக்கு வந்திருந்த கால கட்டத்திலுமாக மூன்று முறை வேலூர் வந்து போனார் அவரோடு சென்னை வரை சென்று விமானத்தில் அனுப்புவதும் பின்னர் சென்னை விமான நிலயத்திலிருந்து வேலூர் அழைத்து வருவதும் எனக்கு தரப்பட்ட வேலை. தேசிய கொடியுடன் அரசாங்க கார், முன் இருக்கையில் ஒரு போலீஸ் காவலர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் கார் மெல்ல செல்லும்போது காரில் போகும் முக்கியஸ்தர் யாரென்று குனிந்து நோட்டமிட்டவர்கள் அனுமானமாக என்னைதான் உற்று பார்த்தனர். உண்மை மறைந்திருந்ததால் அவர்கள் குட்டு பெறாமல் தப்பித்தனர்.*
*அவர் வந்திருந்த சமயம் மேற்கு வங்கத்தில் வெள்ளம் நிவாரண வேலை நடந்து கொண்டிருந்தது. அதையொட்டி வேலூரிலும், காஞ்சியிலும் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, நிவாரண வேலைகள், நிதி நெருக்கடி பற்றி எடுத்துரைத்தார். காஞ்சிக்கு பஸ்ஸில் தான் சென்று வந்தோம். போக்கு வரத்து அமைச்சரின் எளிமையும், அவர் பஸ்ஸில் பயணிப்பதும் அந்த ஊழியர்களுக்கு பெருத்த வியப்பை ஏற்படுத்தியது.*
*மருத்துவ மனை மருத்துவர்கள் கூட வியப்பிற்குள்ளேயே இருந்தனர்.*
*மருத்துவ மாணவர்கள் அறுவை சிகிச்சையை பார்ப்பதற்காக கண்ணாடி கூரை அமைக்கப்பட்டுள்ள மாடத்தில் அவர்களோடு அமர்ந்து ஓபன் ஹார்ட் சர்ஜரி ஒன்றை பார்க்கும் வாய்ப்பை நிர்வாகத்தினர் அமச்சருக்கு அளித்தனர். அவருடன் நானும் அந்த வாய்ப்பைப் பெற்றேன். அப்போதெல்லாம் அத்தகைய அறுவை சிகிச்சை அரிதாக செய்யப்பட்டது. மருத்துவ மனை உதவிப் பணியில் இம்முறை பயனடைந்தது நானே. அதன் பின்னர் கல்கத்தா சென்ற போதும் மாநாடுகளிலும் அவரைத் தேடிச் சென்று பார்ப்பேன். என்னை சந்திப்பதில் அவருக்கும் மகிழ்ச்சிதான்.*
No comments:
Post a Comment