Thursday, October 7, 2021

எப்போதிலிருந்து கம்யூனிஸ்டு

 *இன்னும் இரு மாதங்களில் கட்சியில் இணைந்து ஐம்பது வருடங்கள் முடிந்து விடும்.*


*உறுப்பினராக ஐம்பது வருடங்கள் என்றாலும் கட்சியுடன் ஆன பிணைப்பு எப்போதிலிருந்து?*


*நான் ஒன்பது வயது சிறுவனாக தொடர்பிலிருந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் கம்யூனிஸ் கட்சி. பெரிய வடிவத்தில் உயர் ரக தாளில் மனம் கவரும் வண்ண புகைப் படங்களுடன் மகிழ்ச்சியூட்டும் தஙவல்களுடன் வந்து கொண்டிருந்த சோவியத் லேண்ட் பத்திரிக்கையின் மூலம்... மனிதன் விண்வெளியில் உலகை வலம் வந்த செய்திகளை ஆர்வமுடன் படிப்பேன். என் வகுப்பு குழுவுக்கு பெயர் வைக்க ஆலோசனை கேட்ட போது யூரி காகரின், வாலண்டினா தெரஸ்கோவா என் று முதல் விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனையின் பெயரைச் சொன்னேன். வகுப்பாசிரியரின் புருவம் உயர்ந்தது.* 


*சோவியத் லாண்டில் வரும் பாலே நடனம், இசை நிகழ்ச்சிகளைத் பற்றிய செய்திகளை நான் விரும்பிப் படிப்பேன். உஸ்பெக்கிஸ்தான் இளம் பெண் ஒருவள் பாவனையோடு பாடும் படம் ஒன்று வெளியாகியிருந்தது. ஒரு இளைஞன் பின்னால் நின்று கொண்டு புல்லாங் குழல் வாசித்துக் கொண்டிருந்தான். அந்தப் படம் என்னை வெகுவாக கவர்ந்தது. பத்து பதினைந்து வருடங்கள் அந்த புகைப்படத்தை பாதுகாப்பாக வைத்திருந்தேன். அவ்வப்போது பார்ப்பேன். ஒரு உஸ்பெக்கிஸ்தான் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியதுண்டு. புல்லாங்குழல் கூட வாசித்து பழகினேன்.*


*பன்னிரண்டு வயதில் வீட்டருகில் குடிசைத் தொழிலாக நடைபெறும் பீடி சுற்றும் கூடத்தில் அமர்ந்து ஜனசக்தி படித்துக் காட்டுவேன். தலைப்புச் செய்திகளையும் அறிமுக பாராக்களையும் முதலில் படிப்பேன். பின்னர் நேயர் விருப்பம் போல தொழிலாளர்கள் கேட்கும் செய்திகளை படிப்பேன். பள்ளியிலிருந்து வரும்போதே அழைப்பார்கள். தினமும் குறைந்தது அரை மணி நேரம்  படித்துக் காட்டுவேன். இது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினுடனான தொடர்பின் ஆரம்பம்.*


*முதல் கட்சி நடவடிக்கை எப்போது?.*


*1962ல் என்னுடைய பதி மூன்றாவது வயதில் கம்யூனிஸ்டு கட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சிறுவர்களை சேர்த்துக் கொண்டு, யாருக்கையா ஓட்டு என்று மூன்று நான்கு வீதிகளில் வலம் வந்ததுதான் முதல் கட்சி நடவடிக்கை. பீடித் தொழிலாளர்கள் உடனிருந்து உற்சாகப்படுத்தினர். பாராளுமன்ற அபேட்சகர் ராஜரத்தினம் எம் ஏ பி எல் லுக்கும் சட்ட சபை அபேட்சகர் கே ஆர் சுந்தரத்துக்கும் கதிர் அரிவாள் சின்னத்தில் மறவாமல் ஓட்டுப் போடுங்கள் என்று பேசியதுதான் முதல் அரசியல் உரை.*


*பின்னர் கல்லூரி படிக்கும்போது தீக்கதிர் வார இதழ் விநியோகமப் பணி முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடவடிக்கை. நான் விநியோகித்து தீக்கதிர் வாசித்தவர்கள் சைதாப் பேட்டையில் தோழர் வி என் ராகவன் (தபால் துறையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏழு வருடங்கள் தீக்கதிரில் பணி புரிந்தவர்), ஓல்டு டவுனில் தோழர் கங்காதரன் (அப்போது ரெவின்யூ துறையின் தொழிற்சங்கம், பின்னர் அரசு ஊழியர் சங்கம்), சாயிநாதபுரத்தில் தோழர் ஜெகதீசன் ஏஐஐஇஏ. இந்த எட்டு கிலோ மீட்டர் வழிப் பாதையில் பத்து பதினைந்து தோழர்களுக்கும் விநியோகம்.*

No comments:

Post a Comment