Tuesday, December 15, 2009

இசைத்துக்கொண்டே இருப்பேனே அம்மா

அன்புள்ள அம்மா,

காலையில் தினமும் நடைபயிற்சிக்கு முன் உங்களைப் பார்க்க வருவேனே. காலிங் பெல்லை அழுத்தினதுமே கதவை திறந்து விடுவீர்களே. விடியற் காலையிலேயே எழுந்து காலை வேலையையெல்லாம் முடித்துக்கொண்டு ஹாலிலேயே நடைபயிற்சி செய்வீர்களே. உங்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு உங்களோடு பேசிவிட்டுதானே அன்றைய வேலையையே தொடங்குவேன். இப்பொழுதும் காலையிலேயே வந்துவிடுகிறேன் அம்மா. உங்களைத் தேடுகிறேன் அம்மா.

திகட்ட திகட்ட அன்பைப் பொழிவாயே அம்மா.
திணறுவேனே.
கண்டு ஆனந்தமடைவாயே.
சற்றே பொறுத்து மீண்டும் ப‌ருக விளிம்பில் நின்றேனே.
வாய்ப்பையே இழந்தேனே.
அம்மா அம்மா

இனி யார் எங்கள் மீது அத்தனை அன்பைப்பொழிவார்கள்?

நீயும் பானுவும் தீர்காயுசா திடகாத்திரமா நோய் நொடி இல்லாம இருக்கணும் . அருண் உங்க ரெண்டு பேரையும் உள்ளங்கையில் வைத்து தாங்கணும் என்று ஒரு நாளைக்கு பத்து தரம் சொல்லுவீங்களே அம்மா. போன்ல பேசும் போதும் இதே மாதிரி சொல்லுவீங்களே. எனக்கு அறுபது வயதானாலும் உங்கள் கண்ணுக்கு நான் குழந்தையாகவே தெரிந்தேனே. இனி யார் அப்படி வாழ்த்துவார்கள் அம்மா.

இது மாதிரி மகன்கள், மகள்கள், பேரப்பிள்ளைகள் என்று எல்லோரையும் ஆசீர்வாதம் செய்வீர்களே. சொந்தக்காரர்கள், குடும்ப நண்பர்கள் என்று எல்லோரையும் வாழ்த்துவீர்களே. ஏன் உங்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்களைக்கூட வாழ்த்துவீர்களே‌. அவர்களும் பிஸியான வேலைகளுக்கிடையேயும் உங்களின் ஆசீர்வாதத்தை பொறுமையாக கேட்டு சந்தோஷப்படுவார்களே. இனி யார் இப்படியெல்லாம் வாழ்த்துவார்கள்.

அம்மா. மற்றவர்களின் மீது நீங்கள் காட்டும் அக்கறைக்கு ஈடாக எதைக்கூற முடியும்? ஒவ்வொருவரையும் நீங்கள் பார்க்கும்போதே அவர்களின் தேவையை நீங்கள் உணர்ந்துவிடுவீர்களே. உடனடியாக அந்த தேவைகளுக்கு உங்களால் என்ன செய்யமுடியும் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்களே.

அம்மா. சாந்திக்கு சுகப்பிரசவம் ஆகி நர்சிங் ஹோமின் பிரசவ அறையிலிருந்து வெளியேவந்து படுக்கைக்கு வந்ததும் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் அதனை சாதாரண குளிர் என்று நினைத்து சும்மாயிருந்தபோது நீங்கள் மட்டும் அது சாதாரணக் குளிர் இல்லை. உடனடியாக டாக்டரை கூப்பிட்டு கவனிக்க சொல்லுங்கள் என்று வலியுறுத்தினீர்களே. மற்றவர்கள் நீங்கள் தேவையில்லாமல் பதட்டப்படுவாதாக நினைத்தபோதும் டாக்டர் வரும் வரை ஓயவில்லையே. அப்புறம்தானே தெரிந்தது. கர்பப் பை சுருங்காததாலேதான் அப்படி குளிரியது என்று. அதற்காக பிரத்யேக ஊசியைப் போட்டு டாக்டர் குணப்படுத்தினாரே. சற்று தாமதித்திருந்தாலும் விபரீதம் நேர்ந்திருக்கும் என்றும் தெரிய வந்ததே.

அம்மா. இனொரு சமயம் சாருவிற்கு ஜுரம் வந்து இரண்டு மூன்று நாட்கள் கஷ்டப்பட்டப்பிறகு ஜுரம் விட்டது. ஆனால் குழந்தை மூக்கால் பேசிக்கொண்டு இருந்தாள். ஏதோ ஜலதோஷம் என்று மற்றவர்கள் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தபோது நீங்கள் மட்டும் அந்த காலை அவசரத்திலும் டாக்டரிடம் அழைத்துப்போக வேண்டும் என்று வலியுறுத்தினீர்களே. யாராவது ஒருவர் ஆஃபீசுக்கு லீவோ பர்மிஷனோ போட்டுவிட்டு டாக்டரிடம் அழைத்துப் போகும் வரை ஒயவேயில்லையே. அப்புறம்தானே தெரியவந்தது ஜுரத்தின் வேகத்தினால்தான் குழந்தை மூக்கால் பேசினாள் என்றும் அதிக காய்ச்சலுக்குப் பிறகு கண், காது, மூக்கு அல்லது வேறு ஏதாவது பாதிக்கப்படும் என்றும் அப்படி நேர்ந்தால் உடனடியாக டாக்டரை அணுகி மருத்துவம் பார்க்காவிட்டால் அந்த குறைபாடு அப்படியே நிலைத்துவிடும் என்றும். இப்போது திமிர்ந்த ஞான செருக்கோடு எம் பி ஏ கோல்டு மெடல் வாங்கிய சாரு மூக்கால் பேசிக்கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

அம்மா. வேறொரு சமயம் குழந்தைகள் குடையை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து அதனைப் பிடுங்கி மடக்கியபோது குடைக்கம்பி தங்கத்தின் கண்ணில் கீறி விட்டது. கண்ணை திறக்கவே முடியவில்லை. கண்ணிலிருந்து நீர் கொட்டிக்கொண்டே இருந்த்து. உடனடியாக கண் டாக்டரிடம் காண்பித்து மருந்து வாங்கி வீட்டிற்கு வந்து மருந்து போட்டோம். மருந்து போட்டதும் கண்ணில் எரிச்சல் அதிகமாக இருக்கிறது என்று தங்கம் சொன்னாள். வழக்கம் போல் மற்றவர்கள் அதனை அதிகம் பொருட்படுத்தாதபோது நீங்கள் மட்டும் விடாப்பிடியாக மறுபடியும் டாக்டரிம் போய் மருந்தைக் காட்டி கண் எரிச்சல் ஏன் என்று கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினீர்கள். அப்புறம்தான் தெரிந்தது அதே மருந்தில் ஒரு குறிப்பிட்ட வகையை வாங்க சொல்லி சீட்டு எழுதியிருந்தார் என்றும், வாங்கியிருந்த மருந்து வேறொரு வகையென்றும், கண்ணில் கீறல் ஆழமாக இருந்திருந்தாலோ மீண்டும் மீண்டும் அதே மருந்தை போட்டிருந்தாலோ பார்வை போயிருக்குமென்றும். ஏன் இதனை அழுத்தமாக சொல்லவில்லையென்று டாக்டரிடமும், ஏன் மருந்தை மாற்றித் தந்தீர்கள் என்று மருந்துக் கடைகாரரையும் வைதுவிட்டு, நாமும் சரியான மருந்துதானா என்று பார்க்காமல் விட்டுவிட்டோமே என்றும் வருந்தினோமே.

இப்படியான நிகழ்ச்சிகளுக்குப் பிறகு நீங்கள் தலையிட்டு ஏதாவது சொல்லும்போது சற்றும் அலட்சியம் காட்டாமல் அதை செய்வோமே அம்மா. அவயங்களில் தவிர்த்திருக்கக்கூடிய குறைபாடுகள் உடையவர்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்களைப்போல் அக்கறைக் காட்டக்கூடியவர்கள் அவர்களுக்கு இல்லாமல் போனார்கள் போலிருக்கிறது என்று எண்ணுவேனே அம்மா.

மற்றவர்களுக்கு நீங்கள் காட்டிய அக்கறையைப்போலவே உங்களுக்கு உடல் நலம் சரியில்லையென்றால் மற்றவர்களின் கவனத்தை கேட்டு பெறுவீர்களே. உங்கள் உடல் நலத்தில் நீங்கள் மிக அக்கறையும் கவனமும் கொண்டிருந்தீர்கள். அது மற்றவர்களுக்கு எத்தனை உதவியாக இருந்தது.

ராஜு அண்ணா இயல்பாகவே உங்களிடமிருந்து கற்றுக் கொண்டதுதானோ? நிறைய மருத்துவ தகவல்கள் சேகரித்துவைத்துக் கொண்டு யாருக்கு உடல் நலம் கெட்டாலும் அக்கறையோடு வழி காட்டுகிறான். உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் உடனடியாக வந்து கவனித்து சரியாகும் வரை உங்களுடனே இருப்பானே. அதனால்தானே உங்களின் கடைசி நிமிடங்க‌ளின்போது ராஜுவை வரச்சொல் ராஜுவை வரச்சொல் என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். முதல் நாளன்று பேத்திகளின் திருமணத்திற்கு உங்களின் டாக்டர்களை அழைக்க உங்க‌ளோடு வந்த ராஜு அண்ணா நீங்கள் தேடும் நேரத்தில் உங்களோடு இல்லாமல் போனானே அம்மா. அவன் வரும் வரையில் நீங்கள் காத்திருக்காமல் போனீர்களே அம்மா.

அம்மா எங்களின் வாழ்க்கையில் நீங்கள் எத்தனை தூரம் கூடவே வந்து கொண்டிருந்திருக்கிறீர்கள். இந்த பயணம் எபோதோ தொடங்கியது என்றாலும் எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து உங்களின் மேன்மையை நினைவு கூற முயற்சிக்கின்றேன். அப்பா அலுவலக வேலை போக மீதி நேரம் எப்போதும் இயக்க வேலையாகவே இருந்ததால் முழு நேரமும் எங்கள் ஏழு பேரையும் கவனித்துக் கொள்வது உங்களுக்கு சிறிதும் சலிப்பூட்டியதே இல்லை. பொறுமையின் சிகரம் என்று வருவோர் போவோர் உங்களைப்புகழ்வதைக் கேட்டிருக்கின்றேன்.

எனக்கு பத்து வயது இருக்கும் போது கடைசி தம்பி கைக் குழந்தை. அப்போது அப்பா தபால் தந்தி வேலை நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டு, தலை மறைவாக இருந்து, பின்னர் கைதாகி வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். பல நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த அவரை போலீஸார் கைது செய்து ஜீப்பில் அழைத்துப் போனது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. இன்னொன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது. நீங்களும் நாங்கள் ஏழு குழந்தைகள் மட்டும்தான் இருந்தோம். நீங்கள் சிறிது கூட கலங்கவில்லையே. அப்பா ஈடுபட்டிருந்த இயக்கத்தின் மீது உங்களுக்கு அத்தனை நம்பிக்கையும் பெருமையும் இருந்த்ததால்தானே நீங்கள் அத்தனை தைரியமாக இருந்தீர்கள். குடியிருந்த தபால் அலுவலக குவார்டர்ஸை காலி செய்ய நேர்ந்து வேறு வீடே அருகில் இல்லாத ஒரு வீட்டிற்கு நாம் குடி போனபோது எங்களுக்கு மனம் கனத்திருந்தது. ஆனால் உங்கள் முகத்தைப் பார்த்ததும் லேசாகிவிடுமே. பாட்டியும், சித்தப்பாவும் தங்களோடு வந்து விடுமாறு அழைத்தபோது கூட நீங்கள் செல்லவில்லையே. அப்பா இருக்கும் ஊரிலேயேதான் இருப்பேன் என்று சொல்லிவிட்டீர்களே. இவையெல்லாம்தானே பெரியவர்களான பிறகு நாமும் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இருக்கவேண்டும் என்று எங்களை நினைக்க வைத்தது. நீங்கள் காட்டிய தீரம் அப்பாவின் தீரத்திற்கு ஈடாக இணையாக இருந்ததே. இவையனைத்தையும் அறிந்த, இன்று நாங்கள் அனைவரும் இயக்கத்தில் இருக்கின்றதை பார்க்கும் நம் குடும்ப நண்பர்கள் உங்களை ஜென்னி மார்க்ஸ் என்று அஞ்சலி கூறுகிறார்கள்.

ஒரு சமயம் திருமண வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாத கட்சித் தோழர் ஒருவர் அப்பாவைப் பார்க்க வந்திருந்தார். அப்பா வீட்டில் இல்லை. பிறகு வருவதாக சொல்லி கிளம்பிய அவரை நீங்கள் அழைத்து ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று விசாரித்தீர்கள். அது விஷயமாகத்தான் வந்ததாகவும், தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கட்சி கிளையில் முடிவெடுத்துள்ளார்கள் என்றும் அதனை அப்பாவிடம் சொல்லிவிட்டு போக வந்ததாக அவர் கூறினார். தொடர்ந்து அவரின் திருமண விஷயமாக அவருக்கு பணம் தேவை என்பது தெரிந்ததும், பல வருடங்களுக்குப் பிறகு அப்போதுதான் அடகு கடையிலிருந்து மீட்டு வந்திருந்த வளையலை கழற்றி தந்து கல்யாண ஏற்பாட்டை கவனிக்குமாறு கூறினீர்கள்.

என்னுடைய நெருங்கிய நண்பன் தான் காதலிக்கும் உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள உங்கள் உதவியை நாடிய போது அவர்களின் திருமணம் நடைபெற உறுதுணையாக இருந்தீர்கள்.

அப்பாவின் நண்பர் சீனிவாச ராவிற்கும் அவருடன் பணிபுரிந்த சாவித்திரி அக்காவிற்கும் அப்பாவும் நீங்களும் முன்னின்று நம் வீட்டிலேயே திருமணம் செய்து வைத்தீர்கள்.

அம்மா. நானும் பானுவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தோம். அப்பாவும் நீங்களும் சம்மதித்துவிட்டீர்கள். ஆனால் திடீரென்று ஒரு நாள் அலுவலகத்தில் மதிய உணவின்போது நாங்கள் அன்றே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தோம். நான் அப்பாவை தொடர்புகொள்ள முயன்றேன். அவர் கட்சி கமிட்டி கூட்டம் ஒன்றில் இருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் தெரியாததால் தொடர்புகொள்ள முடியவில்லை. நாங்கள் இருவரும் அலுவலக நண்பரான ஹைமாவதியோடு நம் வீட்டிற்கு வந்தோம். நீங்களும் தங்கமும் மல்லிகாவும் தங்கத்தின் குழந்தை வித்யாவும் மட்டும்தான் வீட்டில் இருந்தீர்கள். எங்களின் முடிவைக் கேட்டு தயக்கம் எதுவும் காட்டாமல் உடனடியாக திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் நம் வீட்டிலேயே திருமணமும் செய்துவைத்தீர்கள். பின்னர் நாம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதுதான் அப்பா வந்தார். நான் இருந்தால் என்ன செய்வேனோ அதைத்தான் நீ செய்துள்ளாய் என்று உங்களைப் பாராட்டினார். நீங்கள் இருவரும் நடந்து வந்த பாதை உங்களுக்குள் எத்தனை இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் இருவரும் வாழ்ந்து காட்டி எங்களுக்கு கற்றுத் தந்துள்ளீர்கள்.

அம்மா. அப்பாவிற்கு பிறகு நம் குடும்பத்தை வழி நடத்திச் செல்வதில் உங்களுக்கு இருந்த தெளிவில் எத்தனை சவால்களை கடக்க, எதிர்கொள்ள வழி காட்டியுள்ளீர்கள். உங்கள் இருவரின் வாழ்க்கையின் வெற்றிதான் இதனை சாதித்தது.

இப்படி பல திருமணங்களை நடத்தி வைத்துவிட்டு, எல்லோரையும் பேத்திகளின் திருமணத்திற்கு அழைத்துவிட்டு நீங்கள் மட்டும் வராமலே போய்விட்டீர்களே அம்மா. இந்த திருமணங்களின் ஏற்பாட்டில் உங்களின் பங்கு மகத்தானது. ஒவ்வொரு விஷயமும் நீங்கள் பங்கேற்று நடந்துவந்தவைதான். இந்த திருமணங்கள் நடைபெறவேண்டும் என்பதுதான் உங்களின் விருப்பமாக இருக்கும் என்பதால் உங்களின் மறைவிற்கு பிறகு சில நாட்களுக்குள்ளேயே ஏற்கனவே ஏற்பாடு செய்து இருந்தபடியே இரண்டு திருமணங்களையும் நடத்திவிட்டோம். அழுது கொண்டே சிரித்தோம். உங்களுக்காக அழுதோம். உங்களின் விருப்பபடி சிரித்தோம்.

அம்மா நீங்கள் தானம் செய்த கண்களால் இந்த உலகத்தைப் பார்ப்பீர்கள். நாட்டில் அக்கிரமம் செய்பவர்களை சாடுவீர்களே. இடதுசாரி இயக்கம் ஜெயிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பீர்களே. அவை நிறைவேறுவதை காண்பீர்கள்.

அம்மா நீங்கள் வாழ்க்கையின் அர்த்தமுள்ள மதிப்பீடுகளைக் கற்றுத் தந்துள்ளீர்களே, அந்த மதிப்பீடுகளை காத்து கடைபிடித்து நீங்கள் எங்களுடனே இருப்பதை உணர்கிறோம். நீங்கள் அலமேலு பாட்டியின் நற்குணங்கள் பலவற்றை வரித்துக் கொண்டுள்ளீர்கள். அதைப்போலவே நாங்களும் உங்களின் நற்குணங்களை வரித்துக் கொள்வோம் அம்மா.

அம்மா, நான் சிறுவனாக இருந்தபோது நீங்கள் பாடி கேட்டிருக்கின்றேன். வீட்டு வேலைகள் செய்யும்போதே மெட்டுகளை ஹம் செய்வீர்கள். ராகங்களை ஆலாபனை செய்வீர்கள். எனக்கு இசையில் நாட்டம் ஏற்பட உங்களின் இசை வெளிப்பாடுகள்தான் காரணம். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிக நேரம் இசைப் பயிற்சியில் ஈடுபட்டு உங்கள் முன்னால் வெளிப்படுத்தவேண்டும் என்று நினைத்திருந்தேன்.அம்மா நீங்கள் உத்வேகமூட்டிய இசையிலேயே நீங்கள் இருப்பதை உணர்கிறேன். இனி நான் இசைத்துக்கொண்டே இருப்பேன்.

அன்புள்ள,
ரவிக்கிளி

2 comments:

  1. அன்புள்ள ரவி

    அற்புதமென்றால் அத்தனை அற்புதமாக உங்கள் உள்ளத்தை உருக்கி வார்த்திருக்கிறீர்கள், ரவி....
    உங்கள் குரல் தழுதழுக்க, இத்தனை நிகழ்வுகளையும் இடையே மூச்சு விட நேரமின்றி ஒரே மூச்சில் நீங்களே எதிரே உங்கள் அம்மா இருக்கச் சொல்லிக் கொண்டே போவதைப் போன்ற ஒரு குரல் எனது காதுகளில் ஒலிக்கத் தான் நான் வாசித்து முடித்தேன். உண்மை, வெறும் வார்த்தை இல்லை.

    சரம் தொடுத்தாற்போல் செல்கிறது உங்கள் எழுத்து நடை. (சில இடங்களில் ஒற்று எழுத்து விடுபட்டிருப்பதையும், ஞானச் செருக்கைச் (செறுக்கு என்று இருக்கிறது) சரி செய்ய வேண்டியதையும் இன்னொரு வாசிப்பில் நீங்களாகவே சரி செய்துவிட்டால் போதும். அப்படியே அச்சிற்கு அனுப்பி விடலாம்.

    காதலாகிக் கசிந்து கண்­ணீர் மல்கிப் பெருகிய ஓர் எழுத்து நதியாக ஓடுகிற பதிவிற்கு எனது வாழ்த்துக்கள். சொந்த விஷயங்கள் தான் அநேகமாக அதிகமாக வந்திருப்பது. ஆனால் அதில் புதைந்திருப்பது ஓர் அன்புள்ளத்தின் வரைபடம். பாசத்தின் முகவரி. மனித நேயத்தின் வண்ணக் கோலம்.

    ரவிக்கிளி என்று முடித்திருப்பதில் விடுபட்ட அந்நியோன்னியமான அடையாளப்பெயரை உங்கள் தாய் உங்களுக்குச் சூட்டி அழைத்திருப்பதும் கவித்துவமாக வெளிப்படுகிறது.

    வேலூர் மானம்பார்த்த ஜமேதார் தெருவில் அண்டை வீட்டில் குடியிருந்த எனது அப்பாவைப் பார்க்க விடுமுறையில் வருகையில், எனது பழைய பள்ளியின் ஆண்டுவிழா நடப்பதை அறிந்து ஆனந்தமாக அதைக் கண்ணுறச் சென்ற இடத்தில், கிட்டத்தட்ட எல்லாப் பரிசுகளையும் ஒரே மாணவராக வாங்கிக் கொண்டிருந்த சி பி கிருஷ்ணனை அப்போதே காத்திருந்து நட்பாக்கிக் கொண்டு நடந்த எனது பயணம் சி எஸ் பி யின் அருகில் கொண்டு வந்து சேர்க்குமென்று அப்போது தெரிந்திருக்கவில்லை. மக்žம் கார்க்கியின் தாய் உங்கள் அம்மா என்றால், அந்தத் தாய் நாவலை எனது கைகளில் வழங்கியவர் சி பி மல்லிகா. நமது திங்களிதழின் முதல் வாசகராகவும் மாறிய அவரது நெகிழ்ச்சிப் பரவசமான குரலை, சி பி கிருஷ்ணனைத் தேடும் ஒவ்வொரு முறையும் காலை வேளைகளில் கேட்க நேர்ந்திருக்கிறது.

    அம்மாவிற்கு எனது அஞ்சலி. உங்கள் அனுபவச் சுவடுகளுக்கு எனது வாழ்த்துக்கள்...


    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  2. Ravi Anna,

    I could not read more than one quarter of your writings. Although I aware of your mother it was too much for me to take it in. I cried so much profoundly, I cannot describe. So wonderful and there can be no other relationship greater than a mother to anyone. thanks for a nice one.

    Balaji

    ReplyDelete