Wednesday, April 1, 2020

மக்கள் ஒற்றுமை வெல்லும்.




ஜனநாயகம் செம்மைப் படுத்தப் படவேண்டும்.

கோளாறுகள் நீக்கப்படவேண்டும்.

நடைமுறையில் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன.

மதச் சார்பின்மைக்கு கேடு விளைவிக்கும் சக்திகள்
ஊக்கம் பெறுகின்றன.


ஒரு மாநிலத்தில் மீண்டும் மீண்டும் தவறு நிகழ்ந்திருக்கிறது.

அதுவே மத்தியில் பரவி மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.

தவறின் விளைவுகளே சந்தித்துக்கொண்டிருக்கும் சிரமங்கள்.


அட்லியின் அடிவயிற்றை கலக்கி,

தல்வார் கப்பலில் பட்டொளி வீசிப் பறந்த

மூவர்ணக் கொடியைப் பார்த்து,

செங்கொடியைப் பார்த்து,

பச்சைக் கொடியைப் பார்த்து

ஏகாதிபத்தியத்தின் காலடியில் விழுந்து கிடந்த
காவிக்கொடி கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


தியாகத்தைப் பார்த்து

துரோகம் கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்தைப் பார்த்து

ஏகாதிபத்திய கொழுப்பெடுத்த ரத்தம் கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


காந்தியைப் பார்த்து,

பகத்சிங்கைப் பார்த்து,

முசாபர் அகமதுவைப் பார்த்து,

சிங்காரவேலரைப் பார்த்து,

நேதாஜியைப் பார்த்து

கோல்வால்கரும் சாவர்க்கரும் கேட்கிறார்கள்

உன் குடியுரிமையை நிரூபி என்று.


பெரியாரைப் பார்த்து,

அம்பேத்கரைப் பார்த்து,

பி ராமமூர்த்தியைப் பார்த்து,

சீனிவாச ராவைப் பார்த்து

கோல்வால்கரும் சாவர்க்கரும் கேட்கிறார்கள்

உன் குடியுரிமையை நிரூபி என்று.


பொதுவுடைமையை பார்த்து

தனி உடைமை கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


உழைப்பாளியின் வியர்வையைப் பார்த்து

சுரண்டிக் கொழுத்த கார்ப்பரேட் ரத்தம் கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


மக்கள் ஒற்றுமையை பார்த்து,
 மதநல்லிணக்கத்தை பார்த்து,

வேற்றுமையில் ஒற்றுமையை பார்த்து

மதவெறி கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


கூட்டாட்சியை பார்த்து

ஒற்றை ஆட்சி கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.



ஜமியா மிலியாவில்
ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தாள்

ஒரு வீராங்கனை.

நடுங்கிய துப்பாக்கி பின்வாங்கியது.

அந்த ஒற்றை விரல் காட்டிய உறுதி

இன்று நாடு முழுவதும் ஷாகின்பாக்குகள்.

அந்த விரல் எழுதிய கவிதைகளாய்
 
ஷாகின்பாக்கின் பெண்மணிகள்.


உயிரினும் மேலானது குடியுரிமை.

ஒருபோதும் அனுமதியோம் மதவெறி கொடுமை.

மதவெறியை நிலைகுலையச் செய்யும் மக்கள் ஒற்றுமை.

தருணத்திற்காக காத்திருக்கிறது மக்களின் பொறுமை.

போராட்ட வரலாற்றில் மற்றொரு பெருமை.

ஷாகின்பாக்குகள் படைக்கின்றன, இது உண்மை.

No comments:

Post a Comment